சமுர்த்தி வங்கியில் பாரிய நிதி மோசடி – நால்வர் கைது!

Sunday, March 5th, 2023

சமுர்த்தி வங்கியொன்றின் வைப்பாளர்களின் ஒன்பது கோடியே 25 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட நால்வர் நேற்றுமுன்தினம் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்மல பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளரும் இரண்டு வர்த்தகர்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சமுர்த்தி வங்கியின் வைப்பாளர்களுக்கு கடன் வழங்கும் வகையில் போலி ஆவணங்களை தயாரித்து இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் படி சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட சந்தேகநபர்கள் நால்வரும் நேற்று ஹெரொம்பாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

48 முதல் 56 வயதுக்கு இடைப்பட்ட இந்த சந்தேகநபர்கள் குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: