சமுர்த்தி உத்தியோகத்தர்  பிரச்சனைகள் ஜனாதிபதியின் பார்வைக்கு!

Thursday, November 2nd, 2017

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் , நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய பிரச்சனை மற்றும் 2014.01.03 ஆம் திகதி முதல் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கேற்ப சம்பளத்தினை குறைக்காது நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தரம் உயர்த்தப்படுவதற்கான முறையொன்றினை தயாரித்தல். கடந்த வரவுசெலவு திட்டத்தின் மூலம் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்ட 10,000 ரூபாவினை பெற்றுக்கொள்ளல் அரசினால் கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபா கொடுப்பனவு மற்றும் 2000 ரூபா பிரயாண செலவினை பெற்றுக்கொள்ளல் போன்ற பல பிரச்சினைகள் இதன்போது முன் வைக்கப்பட்டதுடன், நிதி அமைச்சுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தாமதத்தினை தவிர்த்துக்கொள்ளவும் வினைத்திறனை அதிகரித்துக்கொள்ளவும் சகல சமுர்த்தி வங்கிகளையும் கணனிமயப்படுத்தி நவீனப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது

Related posts: