சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை – நீதி அமைச்சர் !

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கான அனுமதி இனிவரும் காலங்களில் வழங்கப்படுமென நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்ப படிவங்களில் “விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் பூரணப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீதி அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஜீவன் தொண்டமானின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவம் தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வெளிவந்திருந்தது.
இதனையடுத்து, இது தொடர்பாக நான், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு தமிழ் மொழியும் இனிவரும் காலங்களில் உள்வாங்கப்படும் என தெரிவித்தார்” என்று ஜீவன் தொண்டமான் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|