சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருகின்றது – இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, October 10th, 2022

சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்திருந்தது.

இந்த நிலையில் பொருளாதார பாதிப்பிலிருந்து மீளும் முகமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி வாகன இறக்குமதிக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இலங்கையில் வாகனங்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்திருந்தன.

இந்த நிலையிலேயே சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அதிகரித்த வட்டி வீதம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாகவே வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

வாகனங்களின் விலை குறைவடைந்த போதிலும் உதிரிபாகங்கள், வாகன திருத்தம் மற்றும் பழுதுபார்த்தல் என்வற்றுக்கான கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு சூழலில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் குறிப்பிடப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.  

000

Related posts: