சந்தர்ப்பவாத தலைமைகளை விரட்டியடிக்க ஒற்றுமையுடன் முன்வாருங்கள் – தோழர் மாட்டின் ஜெயா தெரிவிப்பு!

Monday, June 4th, 2018

சந்தர்ப்பவாதத் தலைமைகளை எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க அனைத்துத் தோழர்களையும் ஒன்றுமையுடன் முன்வருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், ஜேர்மன் பிராந்திய அமைப்பாளருமான தோழர் மாட்டின் ஜெயா அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் லண்டன் பிராந்திய முக்கியஸ்தர்களுடனான விஷேட கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட நாள்முதல் சுமார் 28 வருடங்கள் கட்சியுடன் உழைத்துக்கொண்டிருக்கும் தோழர்களுக் குநன்றிதெரிவித்தார்.

அத்துடன், பலசோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்த எமது மூத்த உறுப்பினர்கள் அக்காலப் பகுதியில் அவர்கள் செய்த தியாகங்கள் காலத்தால் மறக்கப்படாததும், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாறாகும். அவ்வாறான காலகட்டங்களில் மறு நொடிமரணம் எம்மைத் தழுவிக்கொள்ளும் என்னும் சந்தர்ப்பத்தில் கூட தோழமைக்கான புரிதல், தோழமை என்பது ஒருநாளும் சற்றேனும் தளர்ந்து விடாது உயிர் வாழ்ந்தது என்றால் மிகையாகாது. இவ்வாறான சந்தர்ப்பங்களைக் கடந்துவந்த நாம் சரித்திரத்தில் ஓர் மைல்கல்லான காலப்பகுதியில் வந்துநிற்கின்றோம்.

எமது எதிர்ப்பு அரசியல் சார்ந்தவர்கள் அடையாளமே இல்லாமல் அழிந்து போவோம் என்று கங்கணம் கட்டி நின்ற இந்த வரலாற்று ஓட்டத்தில், தமிழர்களின் அரசியல் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கின்ற ஓர் மாபெரும் சக்தியாக இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிளிர்கிறது. இவை அனைத்தும் ஓர் இரவில் கிடைத்த வெற்றியல்ல. இதற்காக மறைந்த எமது தோழர்களும் எம்மோடு இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்ற தோழர்களும் தமது இல்லற வாழ்வினுள்ளும், அதற்கு அப்பாலும் அளப்பரிய தியாகங்களை செய்துள்ளதை நான் இவ்விடத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.

இனிவரும் காலங்கள் எமக்கு மிகவும் சவாலான சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளையும், இன்னுமொரு நிகழ்ச்சி நிரல்களுக்கு எமது மக்களையும் எமது மண்ணையும் பகடைக்காய்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக செயற்படவேண்டிய ஓர் காலகட்டமாகும்.

நாம் தேர்தல்காலத்தில் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் போல் புறப்பட்டுவரும் புற்றீசல்கள் கிடையாது. பல இன்னல்களான காலகட்டங்களை எமது மக்களுடன் ஒன்றர வாழ்ந்து அவர்களின் வேதனையோடும், அவர்களின் அழுகையோடும், அவர்களின் சிரிப்புக்களோடும் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்ட மீன் எவ்வாறு உயிர்வாழாதோ, அவ்வாறே நாமும் எமது மக்களுடன் ஒன்றரக் கலந்துள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் எமது மண்ணில் சரியானதொரு அரசியல் தலைமையை நிறுவுவதன் ஊடாக எமது மக்களுக்குச் சேவையாற்றவும் சந்தர்ப்பவாதத் தலைமைகளை எமது மண்ணில் இருந்து விரட்டியடிக்கவும் நாம் தயாராகுவதுடன், அனைத்துத் தோழர்களும் ஒற்றுமையுடன் செயற்பட முன்வருமாறும் அறைகூவல் விடுப்பதாகவும் தோழர் மாட்டின் ஜெயா மேலும் தெரிவித்தார்.

Related posts:


நான் எப்போதும் மக்களுக்கு சார்பானவன் : தேர்தல் தொடர்பில் தனித்து தீர்மானத்தை எடுக்க முடியாது - தேர்த...
அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு நீர்கொண்டுவரும் புலிக்குளம் திட்டம் ஆரம்பம்!
வீதி அபிவிருத்தி குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராயப்படும் – அமைச...