சத்தியமூர்த்தி நியமனம் – மாகாணசபை அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாடு – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சாடல்!
Saturday, May 20th, 2023மத்தியில் உள்ள ஒருவர் மாகாண விடயங்களை கையாளுவது என்பது மாகாண சபை முறைமையை நலிவுற செய்யும் விடயம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் மேலும் கூறிய அவர் – சத்தியமூர்த்தி மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் உள்ளார்.
அந்த பணிப்பாளர் பதவியை துறந்து விட்டு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் பதவியை பெறுவதாயின் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அவர் மத்திய அரசின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியையும் பொறுப்பேற்று இருப்பது என்பது எமது மாகாண சபையின் முறைமையினை நலிவுறசெய்யும் என்பதுதான் எமது ஆதங்கம். இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை மாகாண சபை அதிகாரத்தினை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாட்டை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ன வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்
வைத்தியர் சத்தியமூர்த்திக்கு எந்த பதவியை கொடுப்பதற்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்லர். எங்களுக்கு அவர் மீது தனிப்பட்ட ரீதியில் எந்த குரோதமும் கிடையாது.
ஆனால் மாகாண சபைக்குள்ள அதிகாரங்களுக்குட்பட்ட நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் ஆகியவற்றுக்கான நியமனங்கள் மாகாண நிர்வாகத்திற்குட்பட்டவை.
அப்படி இருக்கும்போது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான செயற்படும் ஒருவரை மாகாண சுகாதார பணிப்பாளராக நியமிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
ஏற்கனவே இதற்கு முன்னரும் ஒருமுறை நியமனம் வழங்கப்பட்ட போது மாகாண சபை பதவியில் இருந்த காலம் என்பதினால் அதனை நாங்கள் ஆட்சேபித்திருந்தோம்.
தற்பொழுது மாகாண சபை இல்லாத நிலையிலும் மாகாண சபை அதிகாரத்தினை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாட்டை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
அத்துடன் இரண்டு பதவிகளையும் இவர் வகிப்பதனால் இரண்டு பதவிகளுக்குமே பாதிப்பு ஏற்படும். செயற்திறன் குறையும். ஆனபடியினால் ஏதாவது ஒரு பதவிக்கு மாத்திரம் அவரை நியமிப்பது என்பது சாலச் சிறந்தது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|