சதொசவிடமிருந்து சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி – இந்தியா வழங்கும் 40,000 மெட்ரிக் தொன் அரிசியின் முதல் தொகுதி வார இறுதியில் கிடைக்கும் வர்த்தக அமைச்சு தெரிவிப்பு!!

Friday, April 8th, 2022

இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் 40, 000 மெட்ரிக் தொன் அரிசியின் முதல் தொகுதி இந்த வார இறுதியில் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த அரிசி, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பன, ஒரு கிலோகிராம், 110 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குகின்றன.

அத்துடன் இந்த நிவாரணப் பொதி 1,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையை விட நுகர்வோர் 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து.

இந்தப் புத்தாண்டு நிவாரணப் பொதி நாளை (9) முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: