சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விழிப்புக் குழுக்கள் – வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

Thursday, July 12th, 2018

வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்பு குழுக்களை அமைப்பது எனச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி மேற்குப் பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வின் போது 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன:

  1. போதைப்போருள் பாவனை

சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன் பல சமூக விரோதச் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்கென விழிப்புக் குழுக்களை உரியவர்களின் அனுமதி பெற்று அமைக்க வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது.

விழிப்புக் குழுக்களை அமைப்பதற்கம் அவர்கள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை உறுதி செய்வதற்குப் பிரதேச செயலர், மாவட்டச் செயலர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  1. தனியார் கல்வி நிலையங்கள்

சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தனியார் கல்வி நிலையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை நேர வகுப்புக்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை வகுப்புக்கள் நிறுத்தப்படல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். ஆண்கள் மட்டும் கடமையாற்றும் கல்வி நிலையங்களில் பெண்களும் கடமைக்காக உள்வாங்குவதன் மூலம் சில செயற்பாடுகளைச் சீர் செய்ய முடியும். அத்துடன் புதிதாக ஆரம்பிக்கப்படும் கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு ஏற்ற வசதியுடன் உள்ளதா என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாண கல்வி அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுப் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  1. சிறுவர் துர்நடத்தைகள்

சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறுவர் துர்நடத்தை உட்பட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் வழிப்புணர்வுச் செயற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டுமென்ற பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அண்மையில் கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவைப் போல் மற்றைய சிறுமிகளும் வன்புணர்வுக்கு உள்ளாகக் கூடாது என்ற கண்டனப் பிரேரணையாகவும் இது அமைந்தது.

  1. மயானங்கள் சீரமைப்பு

சபைக்கு உட்பட்ட பகுதியில் 18 மயானங்கள் உள்ளன. அவை எல்லை குறிப்பிடப்படாமலும் நிலை குலைந்தும் காணப்படுகின்றன. மயானங்கள் சீரமைக்கப்பட்டு அவை எல்லையிடப்பட்டு பாதைகள் சீர்செய்யப்பட வேண்டுமென்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது.

மயானங்களைச் சீரமைப்பதற்குச் சபையில் நிதி இல்லை. ஆகவே நான்கு மயானங்கள் வீதம் படிப்படியாகச் சீரமைக்க சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபையால் தெரிவிக்கப்பட்டு பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மயானங்களின் தன்மை மற்றும் செயற்பாடு தொடர்பான யாப்பு தயாரிக்கப்பட்டு சபையின் ஒப்புதலுடன் உள்ளுராட்சித் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  1. பேருந்து தரிப்பிடம் அமைத்தல்

காரைநகர், வட்டுக்கோட்டை வீதியில் அமைந்துள்ள பேருந்துத் தரிப்பிடம் முழுமையாகச் சீமெந்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் தரிப்பிடம் சீமெந்தில் இருந்தது. பின்னர் அது தகரம் மற்றும் அடிப்பாகம் கொங்கிறீட்டால் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள அந்தத் தரிப்பிடத்தைச் சீமெந்துத் தரிப்பிடமாக மாற்ற வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துப் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Related posts: