சட்டத்தை நடைமுறைப்படுத்த தாக்குதலும் நடத்துவோம் – பொலிஸ் மா அதிபர்!

Monday, August 1st, 2016

சட்டத்தை பொலிஸார் அமுல் செய்யும் போது, பொலிஸாருடன் மோதலுக்கு வந்தால் தாக்குதல் நடத்தவும் நாம் தயங்கப் போவதில்லை. பொலிஸார் அவ்வாறு சட்டத்தை அமுல் செய்யும் சந்தர்ப்பங்களில் நான் பொலிஸாரின் பக்கமே இருப்பேன் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

காலி, கொஸ்கொட பகுதியில் பாடசாலையொன்றில்  நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  பொலிஸ் மா அதிபர் உரையாற்றிக்கொன்டிருக்கையில், அவரது கையடக்கத் தொலைபேசிக்கு கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஊடாக விஷேட அழைப்பொன்று கிடைத்திருந்தது. அதில் ஒன்றினைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது அரச வாகனங்கள் இரண்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக    தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக வாகனங்கள் இரண்டை கைப்பற்றவும் சந்தேக நபர்களை  கைது செய்யவும் நேரடி உத்தரவொன்றை பிறப்பித்த பொலிஸ் மா அதிபர் தொடர்ந்து உரையாற்றும் போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

சட்டத்தை அமுல் செய்யும் போது ஒவ்வொருவரும் நினைத்தவாறு செயற்பட அனுமதிக்க முடியாது. கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இப்போது என்னுடன் பேசினார்.  நான் அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். பயப்படாது செயற்படுமாறும் அவர்களுக்கு பக்க பலமாக நான் இருப்பதாகவும் அவரிடம் கூறினேன். அரசின் வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்  சட்டத்தை அமுல்  செய்ய உத்தரவிட்டேன். சட்டத்தை அமுல்  செய்யும் போது பொலிஸாருடன் முறுகல் நிலையை ஏற்படுத்தி மோதலுக்கு வந்தால் நாமும் தாக்குதல் நடத்துவோம். தாக்க வந்தால் பயப்பட மாட்டோம். கண்டிப்பாக தாக்குவோம். அதன் பின்னணியில் நான் இருப்பேன். எனினும் கொலை செய்ய முடியாது. படு காயங்களை ஏற்படுத்த முடியாது. குறைந்த பட்ச பலப் பிரயோகம் செய்யலாம் என்றார்.

Related posts: