சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Tuesday, December 21st, 2021சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கும் அரச அனுசரணை மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கேகாலை புனித மரியாள் கல்லூரியின் இடம்பெற்ற அரச நத்தார் விழாவில், அலரி மாளிகையிலிருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
சமுதாயத்தில் நல்ல குடிமக்களை உருவாக்கும் வழியை மதம் கற்றுத் தருகிறது. எல்லா மதங்களும் நல்ல வாழ்க்கையை வாழவே போதிக்கின்றன. மாறாக வெறுப்பையும் கோபத்தையும் பரப்புவதற்காக அல்ல. எந்தவொரு சமூகத்திலும் ஒழுக்கத்தைப் பேணுவதில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதேவேளை சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு சமூகத்தில் சமய ஒழுக்கம் குறைவதே காரணம் என்பதை நாம் அறிவோம்.
சமுதாயத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல மதத் தலைவர்களின் சரியான வழிகாட்டுதல் இன்று நமக்குத் தேவைப்படுகிறது. இதேநேரம் அடித்து, பேசி ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது. சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகம் உருவாகாது.
விழுமியங்களையும் சமய நற்பண்புகளையும் வளர்த்து ஒட்டுமொத்த சமுதாயமும் வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மதம் சார்ந்த சமுதாயத்தின் மூலம் சமுதாயத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்.
அந்தவகையில் விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் இலக்கை அடைய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|