சக மாணவர்கள் தாக்குதல் : மாணவ முதல்வர் பரிதாபமாக பலி!

சக மாணவர்கள் சிலரால் தாக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மாணவரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சிலாபத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி கற்றுவந்த 16 வயதுடைய பிரதான மாணவ தலைவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி இரவு மத நிகழ்வொன்றில் கலந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது அவரை மறித்த மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அதில் இருவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
மற்றைய மாணவர் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சிலாபம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
|
|