சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பின – பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, January 10th, 2022

பாடசாலைகளில் சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று 10 ஆம் திகதிமுதல் வழமை போன்று கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

எவ்வாறாயினும், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாணவர்கள் தங்களது உணவுகளை வீடுகளிலிருந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றுமுதல் பாடசாலைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதால் பெற்றோர்கள், மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைகள் கடந்த வருடம் இடம்பெறவிருந்த நிலையில், கொவிட்19 தொற்றினால் பாதிப்படைந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை கருத்திற்கொண்டு இந்த வருடத்திற்கு பிற்போடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் பரீட்சைகள் தாமதமடைவதால் பெரும்பாலான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படகூடும்.

எனவே முன்னர் திட்டமிட்டப்படி, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடத்தப்படும் என்பதுடன், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts: