சகல அரசாங்க பாடசாலைகளிலும் இணக்க சபை!

Monday, November 12th, 2018

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் மாணவர் இணக்க சபைகளை உருவாக்க மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு நடவடிக்கையெடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ரஜினி அத்தபத்து அறிவித்துள்ளார்.

மேற்படி இணக்க சபைகளை பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்துவதற்கு கல்வியமைச்சின் சமாதான நல்லிணக்க கல்விப் பிரிவுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் கல்வியமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான பூரண ஒத்துழைப்பும் கல்வியமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

மாணவர்கள் மத்தியில் ஏற்படும் குறிப்பாக க.பொ.த, சாதாரண, உயர்தர மாணவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் நோக்கில் முதற்கட்டமாக நாடு தழுவிய ரீதியில் பரீட்சார்த்தமாக 100 பாடசாலைகளில் மாணவர்கள் இணக்க சபைகள் ஏற்படுத்தப்பட்டு அதன் பின்னர் சகல இடைநிலைப் பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர் இணக்க சபைகளில் மாணவர் பிரதிநிதிகள், ஆசிரியர் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், கிராமசேவை அதிகாரிகள் உள்ளடக்கப்படுவர்.

இதேவேளை இணக்க சபையின் முக்கியத்துவம், அதன் செயற்பாடுகள் பற்றி சகல மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பாடசாலை பாடவிதானத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் ஓர் அத்தியாயமாக சேர்க்கப்படுவது பற்றி கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளதெனவும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ரஜினி அத்தபத்து மேலும் தெரிவித்தார்.

Related posts: