கோப் குழுவிலிருந்து வெளியேறினார் வேலுகுமார் !

Thursday, July 7th, 2016

நாடாளுமன்றத்தின்  பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து  தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் விலகிக் கொள்வதாக அறிவித்தமையையடுத்து அந்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான  சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தான் ஏற்கனவே நாடாளுமன்ற சபாநாயகரின் சபை தலைமைக்குழு, பொது குழு, மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்வி ஆகிய அமைச்சுகளின் கண்காணிப்பு குழு ஆகியவற்றில் உறுப்பினராக செயற்படுவதானால் இவை தொடர்பிலான செயற்றிட்டங்களை உரியவாறு முன்னெடுக்கும் நோக்கத்தின் அடிப்படையில் கோப் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே கோப் குழுவில் சட்டத்தரணி ஒருவரை கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்வது பொருத்தமானது என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்தமைக்கமைய சட்டதரணி சுஜீவ சேனசிங்க இதற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான கடிதமும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின்  பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு என்னுடைய பெயரை பரிந்துறை செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். ஊழல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் உள்ளது.  அந்தவகையில் கோப் குழுவானது தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விற்பனை தொடர்பிலான விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றது. கோப் குழுவின்  இந்த விசாரணைகளுக்கு என்னால் முடிந்த முழு ஒத்துழைப்புகளை வழங்குவேன் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன

Related posts: