கொவிட் – 19 : 2 ஆயிரத்து 855 பேர் பலி!

Friday, February 28th, 2020

இத்தாலியில் கொவிட் – 19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

 தமது நாட்டில் கொவிட் – 19 தொற்று பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாக இத்தாலி அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இதன் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் கடந்த புதன்கிழமை வரை கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 200 ஆக காணப்பட்ட நிலையில் இன்று அதன் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொவிட் – 19 தொற்று இத்தாலி மாத்திரமின்றி பல ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகின்றது.

இதனடிப்படையில் ஜேர்மனியில் 27 பேர், பிரான்ஸில் 18 பேர் மற்றும் ஸ்பெயினில் 15 பேர் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில் கொவிட் – 19 தொற்று காரணமாக இத்தாலியின் பொருளாதாரம் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வடக்கு பகுதியிலுள்ள பல முக்கிய வணிக நிலையங்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளுக்காக தமது விமான சேவையை பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

கொவிட் – 19 தொற்று காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த நாடுகளுக்கான 54 விமான சேவைகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை சிங்கப்பூரில் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த நாட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 10 வயது சிறுவர் ஒருவரும் அடங்குவதாக தெரிய வருகின்றது.

இதனடிப்படையில்  சிங்கப்பூரில் இதுவரையில் 96 பேர் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் சிங்கப்பூரில் கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் சிகிச்சை பின்னர் மருத்துவமனைகளில் இருந்து நேற்றைய தினம் வெளியேறியுள்ளனர்.

சர்வதேச ரீதியில் இந்த தொற்றால் இதுவரை 83 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்து 855 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: