கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டம் – ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Tuesday, July 13th, 2021

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் ஆரம்பமானது.

முதலீட்டாளர்களின் பங்குக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை உடனடியாக உறுதிப்படுத்துதல், நிறுவனச் செயற்பாடுகள் குறித்து முதலீட்டாளர்களை அறிவூட்டுதல், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்..

இந்த டிஜிட்டல்மயப்படுத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களுக்கு உலகில் எந்தவோர் இடத்திலிருந்தும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல், மாதாந்தக் கூற்றுகளைப் பெற்றுக்கொள்ளல், தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளல் என்பவற்றுடன், உள்நாட்டு நிறுவனங்களால் கணக்குகளைத் திறப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே டிஜிட்டல்மயப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை விவரங்களைத் தரவிறக்கம் செய்வது விரைவுபடுத்தப்படுவதால், 65 ஆயிரம் புதிய முதலீட்டாளர்களையும் கடந்து, 17 ஆயிரம் புதிய மத்திய வைப்புத்திட்ட முறைமை கணக்குகள் (CDS) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

முன்பதாக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC), கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (CSE) மற்றும் இலங்கை மூலதனச் சந்தை ஆகியவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டின் முதற்கட்டம், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்பு - புகையிரத கட்டணத்திலும் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டம் - அமைச்...
இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது - தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்...
உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் - கல்வி...