கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!

Friday, May 6th, 2016

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்ப திகாரி டி.ஜெ.பி.டபிள்யூ.பியஷாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

அளவெட்டியை சேர்ந்த சிப்புக் என அழைக்கப்படுகின்ற தவராசா தயாபரன் (24 வயது) என்பவரே பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரோடு தொடர்புடைய மானிப்பாய் பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் 23 கொள்ளை சம்பவங்களில் தொடர்புபட்டுள்ளதாகவும் அதில் சுன்னாகம் பகுதிகளில் 15 சம்பவங்களுடனும் அச்சுவேலி பகுதியில் 4சம்பவங்களுடனும்,

தெல்லிப்பழை பகுதியில் 3 சம்பவங்களுடனும் கோப்பாய் பகுதியில் 1 சம்பவத்துடனும் இவர் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளையிட்ட நகைகளை பெற்று அதனை உருக்கி யாழில் உள்ள பிரபல நகைக் கடைகளில் விற்பனை செய்கின்ற மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இன்னும் மூன்று பிரதான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் எடுத்துள்ளதாகவும்,

இந் நகைகள் கொள்ளையிடப்பட்டது எனத் தெரிந்தும் பெற்றுக் கொண்ட விற்பனை செய்த மற்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Related posts: