கொள்கையில் மாற்றமில்லை – அவுஸ்திரேலியா!

Wednesday, August 17th, 2016

 

ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமாக செயற்படவேண்டும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆஸி. நாட்டுக்குச் செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

இந்த சம்பவத்தால் எல்லை பாதுகாப்பு தொடர்பிலான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.   அத்துடன் இது போன்ற ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராட்டுகின்றோம்.    தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவோம்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கையினை தடுக்கும் கூட்டு முயற்சியில் நெருக்கமாக  செயற்பட்டுவருகின்றன. 2013 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையினால் படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்படுபவர்களை தடுக்க முடிந்துள்ளது.

எனினும் அண்மையில் சட்டவிரோதமான முறையில் படகுப்பயணம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முற்பட்ட 6 இலங்கையர்களை அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்புப் படையினர் கைதுசெய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

எனவே அவுஸ்திரேலியா அரசாங்கம் சட்டவிரோத  படகுப்பயணம் மூலம் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்படுபவர்கள் தொடர்பில் கொண்டுள்ள சட்ட ஏற்பாடுகளில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை. சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முற்படுபவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்போவதில்லை.

ஆகவே ஆட்கடத்தல்காரர்களின் போலியான வாக்குறுதிகளை நம்பி எவராவது சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் படகுப் பயணம் மூலம் பிரவேசிக்க முற்படுவார்களாயின் அது அவர்களது பணத்தையும் காலத்தையும் வீணடிக்கும் செயலே அன்றி வேறெதுவும் இல்லை. மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள்  பிரவேசிக்க முற்படுபவர்களை தடுக்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலியா ஏனைய பிராந்திய நாடுகளுடனும் இணைந்து செயற்படும்.

Related posts: