கொறோனா வைரஸ் கொறோனா வைரஸ்: இலங்கையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – சுகாதார அமைச்சர் !

பரவலை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு நாளாந்தம் சந்திப்புகளை நடத்தி, நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் பணிப்பாளர், கொறோனா வைரஸ் நாட்டிற்குள் பிரவேசிக்காதிருப்பதற்கும், பிரவேசித்தப் பின்னர் பரவாதிருப்பதற்கும் போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக விமான நிலையங்களில் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேநேரம், யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலும் விசேட கண்காணிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வருகின்ற விமானத்தின் ஊடாக வருகின்ற பயணிகளை கண்காணிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றாலும், உடனடியாக மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து அடிப்படையில் மத்திய நிலை ஆபத்துடைய வைரசாகவே கணிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த நோய்ப்பரவலை தடுப்பதற்காக பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணிக்குழுமத்தினரின் பாதுகாப்பு சம்மந்தமாகவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், கொறோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, சிகிச்சைப் பெறுவது போன்ற விடயங்களை அறிவுறுத்துகின்ற சுற்றுநிரூபம் ஒன்றும் சுகாதார அமைச்சினால் வெளியாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த நோய் தொடர்பான விபரங்களை வழங்குவதற்கு 0710107107, 0113071073 ஆகிய 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி சேவை இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|