கொரோனா வைரஸ்: பாடசாலை மாணவர்களை பாதுகாக்க கல்வி அமைச்சு விஷேட நடவடிக்கை!

தற்போது முழுஉலகையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாண, வலய மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்கள் அதேபோல் தேசிய பாடசாலைகளின் அதிபர்களை தெளிவுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளர்கள் காச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி ஆகிய அறிகுறிகளை கொண்டிருப்பதுடன், சுவாசிப்பதில் சிரமம், சுவாசிக்கும் வேகம் அதிகரித்தல், சிறிய அளவான நிமோனியா காய்ச்சல் ஏற்படல் போன்ற அறிகுறிகளையும் கொண்டிருப்பார்கள் என தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. கைகளை எந்நேரமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சவர்காரத்தினால் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் (இதற்காக கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்ட அல்ககோல் திரவத்தை பயன்படுத்த முடியும் (Alcohol Rub).
இருமல் அல்லது தும்மல் வந்தால் டிசுவை பயன்படுத்தவும் அல்லது கைக்குட்டையைப் பயன்படுத்தவும் அவ்வாறான சந்தர்பங்களில் முழங்கையின் உட்புறத்தை மறைக்கவும்.
பயன்படுத்திய டிசுவை சுகாதாரமாக முறையில் அப்புறப்படுத்த மறக்காதீர்கள். அனாவசியமாக வாய், கண்கள் மற்றும் மூக்கை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும். நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தவரை மாணவர்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை.
வைரஸ் பரவினால் அதில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது சம்பந்தமாக சுகாதார அமைச்சு தொடர்ச்சியான தெளிவுபடுத்தல்களை வழங்கி வருகின்றது.
கடுமையான சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுடன் தொடர்புகளை பேணுவதை தவிர்க்கவும், அவ்வாறான நோயாளிகளுடன் நெருங்கி கடமையாற்றும் போது கட்டாயமாக கைகளை கழுவ வேண்டும். வன விலங்குகள், இறந்த விலங்குகள் மற்றும் நோய் பாதிப்புக்குள்ளான விலங்குகளை தொடுவதை தவிர்கவும்.
இது தொடர்பில் மேலதிக ஆலோசனைகள் அல்லது தகவல்களை பாடசாலைகளுக்கு அருகிலுள்ள சுகாதார அலுவலகத்தின் மருத்துவ அதிகாரியைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து கிளையை தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விடயங்களை தெரிந்துக்கொள்ள முடியும்.
அதற்கான தொலைப்பேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 0112784872 அல்லது 0112784163 என்பதே அந்த இலக்கங்களாகும்.
Related posts:
|
|