கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு

Sunday, September 5th, 2021

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது எனவும் சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இறுதியாக பதிவான கொரோனா மரணங்களில் 5 பேர், 30 வயதுக்கு குறைவானவர்கள் என அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் போதுமானளவு ஓய்வெடுக்க வேண்டியது அவசியம் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கமைய திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் இந்த இடங்கள் தொடர்பாக அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் அந்த காணிகளை பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் இரண்டாயிரத்து 522 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி மயானத்தில் மேலும் 300 சடலங்களை புதைப்பதற்கான காணி மாத்திரமே காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில்

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 869 ரக விசேட விமானத்தில் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கு ஒரே தடவையில் கொண்டுவரப்பட்ட அதிகப்படியான தடுப்பூசி தொகை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: