கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் :ஏப்ரல் 20வரை பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சர் !

Friday, March 13th, 2020

இன்றுமுதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு ஆனந்த கல்லூரியின் முன்பாக இன்று குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரின் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான போலியான தகவல்களால் இந்த நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்து கல்வி அமைச்சில் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதில் வைத்தே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் தனியார் கல்வி நிலையங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், என்ற போதும் மாணவர்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை எனவும், வைரஸ் தொற்று குறித்து போலியான தகவல்கள் காரணமாக சமூகத்தில் தனிப்பட்டவர்களால் ஏற்படுத்தப்படும் குழப்ப நிலையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: