கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேலணை பிரதேச சபையால் பல்வேறு சுகாதார முன்னேற்பாடுகள் முன்னெடுப்பு!

Wednesday, March 25th, 2020

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இன்று மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பல இடங்களில் கிருமி நாசினி விசிறப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகினிறன.

இதன் பிரகாரம் இன்று வேலணை பிரதேச சபையின் தவிசாளரதும் செயலாளரதும் ஏற்பாட்டில் சுகாதார பிரிவினருடன் ஏனைய ஊழியர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து வேலணை பிரதேசத்தின் பல இடங்களிலும் மக்கள் நெரிசலாக வந்து செல்லும்  இடங்கள் என அடையாளம் இடப்பட்ட இடங்களில் கிருமி நாசினிகள் விசிறப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நாளைமுதல் வேலணை பிரதேச சபை ஆளுகைக்கு குட்பட்ட மண்டைதீவு, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய உப அலுவலகங்களின் முக்கிய பகுதிகளுக்கும் குறித்த கிருமி நாசினி விசிறப்படவுள்ளது.

அத்துடன் கிருமித் தொற்றை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு போதியளவு தெளிக்கும் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் பிரதேசத்தின் குடிமனைகளுக்கு தெளிக்கும் நடவடிக்கைகளில் பல சிரமங்கள் காணப்படுவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்படும் பட்சத்தில் துரிதகதியில் இந்த கிருமி நாசினி விசிறும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் துறைசார் தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனிடையே குறித்த கிருமி நாசினி விசிறும் கருவிகள் உள்ளிட்ட பல சுகாதார உபகரணங்கள் பிரதேச சபையில் பற்றாக்குறை உள்ள நிலையில் பிரதேசத்தின் சுகாதார சீர்குலைவை தடுக்கும் வகையில் அவற்றை பெற்றுக்கொள்ள வேலணை பிரதேச சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான  கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: