கொரோனா நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 19th, 2020

எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. இதன்போது ஏப்ரல் 20 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.

எனினும் நாட்டில் தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறக்கும் திகதி மே மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறப்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்பதுடன் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதாரத்துறையினரின் பூரண அனுமதியுடன் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை அதிபர்களின் தலைமையில் பெற்றோரின் உதவியுடன் பாடசாலைகளை சுத்தம் செய்வதற்கான சிரமதானமும் இடம்பெறவுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதத்தை நாளை திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

Related posts: