கொரோனா தொற்றின் வேகம் முன்னரை விட அதிகம் – தடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் – தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி தெரிவிப்பு!
Saturday, October 31st, 2020கொரோனா பரவல் சமூக தொற்றாக ஏற்படும் பட்சத்தில் நோயை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரியான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா கொத்தணி பிரத்தியேகமானது. ஏறத்தாழ சகல மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். முன்னரை விட தொற்றுப் பரம்பல் வேகமாக இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. எனவே தொற்று பரம்பலை தடுப்பதற்கு பொது மக்களின் கூடுதலான பங்களிப்பு அவசியம் என வைத்தியர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுன்னார்.
இதேவேளை, நேற்றையதினம் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 633 பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள். நேற்றிரவு இனங்காணப்பட்ட 315 பேரில் 236 பேர் பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களின் தொடர்பாளர்கள் ஆவார். மொத்தமாக 83 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள்.
இதன்பிரகாரம், திவுலப்பிட்டி மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இலங்கையில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்து 424 ஆகும். இவர்களில் ஆறாயிரத்து 123 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். நான்காயிரத்து 282 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|