கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி – தேசிய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தகவல்!

Friday, January 22nd, 2021

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுறுதியான மருத்துவர்களில் 40 பேர் தற்சமயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பேணாமை காரணமாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிமுதல் இதுவரையானை காலப்பகுதியில் 2 ஆயிரத்து 710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 600 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வணிக விமானங்களுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் முதல் சுற்றுலாப்பயணிகளாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 10 பேர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 648 ரக விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்தனர். இதுதவிர, மேலும் 5 ஜெர்மனியர்கள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பஹ்ரைனில் சிக்கியிருந்த 186 இலங்கையர்களும் நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 56,000 கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: