கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!
Saturday, November 14th, 2020இன்றைய தீபாவழி திருநாளை உலகெங்கிலும் வாழும் இந்துமக்கள் வழமைக்கு மாறான ஒரு அபாயகரமான சூழ்நிலைக்கு மத்தியில் கொண்டாடியுள்ளனர்
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதற்கு தீபாவளி போன்ற கலாசார விழாக்கள் பெரிதும் உதவும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
தீபத்திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்கி ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
முழு உலகமும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியை தருகின்றது.
இந்த தீபத் திருநாளில் அந்த அமைதிக்காக எமது நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒருமனதாக கடவுளுக்காக அர்ப்பணிப்புகளை செய்வர் என்பது நம்பிக்கையாகும். அத்துடன் அது சிறந்ததோர் சமூகத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கட்டியெழுப்பும் எமது நோக்கத்திற்கு ஆசீர்வாதமாக அமையும் என தாம் எண்ணுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள்ளார்.
இதேவேளை, தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள் ஆகும். என தெரிவித்திரந்த பிரதமர் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றப்படுகின்றது.
தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இந்த தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.
இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம்.
இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது.
கொரோனா நோய்த்தொற்றிருந்து இலங்கை விரைவில் மீள்வதற்கும் அனைத்து மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இந்த தீபாவளித் திருநாள் அமையட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒளிமயமான எதிர்காலம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களை உணர்த்தும் வெளிப்பாடாகவே தீபங்கள் ஏற்றி தீமைகள் அகன்றதென மகிழ்ந்து கொண்டாடும் தீபத்திருநாளில் அனைவரினதும் எண்ணங்களும் ஈடேற வேண்டுமென வாழ்த்துகின்றேன் என கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அனைத்து வகைப் பிரச்சனைகளுக்கும் கௌரவமானதும், நியாயமானதுமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனை அடைந்து கொள்ள தேசிய நல்லிணக்கம் எனும் ஒளிவிளக்கை ஏந்தி பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
இருளை நீக்க வீடுகளில் தீபங்களை ஏற்றுவதைப் போல நம்மைச் சூழவுள்ள பின்னடைவுகளிலிருந்தும், கல்வி மற்றும் பொருளாதார சரிவுகளிலிருந்தும் நாம் முன்னோக்கி பயணிக்க உறுதிகொள்ளவேண்டும்.
வளமான தேசமும், நம்பிக்கையான எதிர்காலமும் உறுதிப்படுத்தப் படாதவரை தமிழ் மக்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் தீராபிரச்சினைகளாகவே இருக்கப்போகின்றது. அத்தகைய நிலையே தொடரவேண்டும் என தமது சுயநலன்களை முன்னிருத்தும் அரசியல் வாதிகள் விரும்புகின்றனர்.
ஆனால் எமது ஓய்வின்றிய உழைப்பும் கடினமான முயற்சிகளும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கும், அன்றாடப் பிரச்சனைகளுக்கும், அபிவிருத்தி சார்ந்த பிரச்சனைகளுக்கும் தேசிய நல்லினக்கத்தின் வழியில் நடைமுறை சாத்தியமான அணுகுமுறை ஊடாக பொறருத்தமான தீர்வுகளை பொற்றுக்கொடுப்பதே ஆகும்.
பண்டிகைக் காலங்களில் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிவீச வேண்டும் என அவரவர் அறிக்கைகள் விடுவதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக அத்தீர்வுகளை அடைந்து கொள்வதற்க்கான விருப்பமும், அர்ப்பணிப்பும், உழைப்பும் இருக்க வேண்டும்.
அந்த உறுதியைச் சுமந்தவாறே கரடு முறடான பாதையாயினும், அரசியலில் நாம் எதிர்பார்த்த பலம் கிடைக்காத போதும் கிடைத்த அதிகாரத்தை மக்கள் நலனை முன்நிறுத்தி உழைக்க வேண்டுமென உறுதியேற்றுள்ளோம்.
எமது உழைப்பும், அர்ப்பணிப்பும் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள இருளை விலக்கி நிரந்தர ஒளியை கொடுக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்
இதேவேளை தீபாவளியை வீடுகளிலிருந்தே கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள்.
இந்த கொடிய கொரோனாநோயிலிருந்து நாம் விடுபட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீட்டிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடுங்கள் என யாழ்ப்பாணம் இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்துமதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்..
உலகளாவிய ரீதியில் கொரோனாதாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. எனவே தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் தீபாவளியை வீடுகளிலிருந்து ஒன்றுகூடல்களை தவிர்த்து அகவணக்கம் ஊடாக கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் இந்துமதத் தலைவர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொரோனாத் தடுப்பு சமூக இடைவெளியைப் பேணாது தீபாவளிப் பண்டிகைக் கொள்வனவுக்காக யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொதுமக்கள் நேற்று அலை மோதியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
வழமையாக தீபாவளிப் பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ்.நகரம் நிறைந்து காணப்படும். எனினும்,இம்முறை கொரோனா அச்சுறுத்தலால் அனைவரும் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியைக்கொண்டாடுமாறுசுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் இந்து மதத் தலைவர்களும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதனால் யாழ்.நகரம் நேற்று மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளில் பொதுமக்கள் வழமைபோன்று அலைமோதியதைக் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|