கொரோனா தாண்டவம்: அமெரிக்காவில் பாரிய நெருக்கடி – இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி!

Saturday, March 28th, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச ரீதியில் அமெரிக்கா கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

பிந்திய தகவல்களின் அடிப்படையில், ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 396 பேர் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் கடந்த 24 மணிநேரத்திற்குள் 16 ஆயிரத்து 961 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அமெரிக்காவில் ஆயிரத்து 607 பேர் மரணித்துள்ள நிலையில், 312 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், 2 ஆயிரத்து 471 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேநேரம், இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியானோர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 919 மரணங்கள் பதிவாகியுள்ளன. வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்து 950 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக அதிகளவான மரணங்கள் ஸ்பெய்னில் பதிவாகியுள்ளன. 5 ஆயிரத்து 138 பேர் பலியாகியுள்ள நிலையில், 773 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.

65 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்து 357 பேர் வைரஸ் தொற்றியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 32 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர். ஃப்ரான்ஸில் ஆயிரத்து 995 பேர் பலியாகியுள நிலையில், 32 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீனாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிய தொற்றாளர்களோ அல்லது புதிய மரணங்களோ பதிவாகவில்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 ஆயிரத்து 292 பேர் மரணித்துள்ள நிலையில், 81 ஆயிரத்து 340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், 74 ஆயிரத்து 588 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இதேவேளை, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Related posts: