கொரோனா அச்சம் – பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, October 4th, 2020

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த திட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் கொரோனா தொற்று அச்சம் குறைவடைந்தததைத் தொடர்ந்து, அதனை பெரிதளவில் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நிலையில், உடன் அமுலுக்கு வரும் வரையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று  உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரும்வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

குறித்த பகுதிகளுக்கு நுழைவது மற்றும் வெளியேறுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

இந்த நிலையிலேயே பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என உடன் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: