கொரோனாவை வெற்றிகொண்டாலும் அதன் பின்னரான காலத்தை இலங்கையால் தாக்குப்பிடிக்க முடியுமா?

Monday, April 13th, 2020

இலங்கை கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டாலும் அதன் பின்னரான காலப்பகுதியில் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றால் இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும் உள்நாட்டு உற்பத்திகளை தவிர்த்து வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தமையால் அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படப்போகும் மோசனமான நிலைமைகளை தவிர்க்கவே முடியாது என்றும் அவர்கள் இலங்கைக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முழு உலகுமே கொரோனா தொற்றுக்குக்கு இலக்காகி நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை அனைத்து நாடுகளுமே சந்திக்கவுள்ளதாக சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை போன்ற நடுத்தரவருமானம் கொண்ட நாட்டின் எதிர்கால நிலைமகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதுதொடர்பில் ஆய்வாளர்கள் தெரியப்படுத்துவதாவது –

பல்வேறு அனர்த்தங்களால் நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அவற்றுக்கு மத்தியில் உலகம் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இயங்க முடியாதவொரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே ஒட்டுமொத்த உலக நாடுகள் அனைத்துமே நெருக்கடியான சூழலொன்றுக்கு முகங்கொடுக்கவுள்ளமை பொதுப்படையானது.

வெளிநாடுகளில் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிகளின் போது இலங்கையின் உள்நாட்டிலும் அதன் தாக்கங்கள் வெகுவாக ஏற்பட்டே வந்திருக்கின்றன. இம்முறை உலகளவில் பல்வேறுபட்ட துறைகளில் பாதிப்பு ஏற்படுவதால் இலங்கையிலும் அதன் தாக்கம் வெகுவாக இருக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் மொத்த வருமானத்தில் 7சதவீதத்தினை விவசாயத்துறை மூலமாகவும், 29சதவீதத்தினை கைத்தொழில் துறையும் எஞ்சியவை சேவைத்துறை ஊடாகவும் கிடைகின்றது.

தற்போதைய சூழலில் இத்துறைகள் அனைத்தும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. விவசாயத்துறையை எடுத்துக்கொண்டால் தற்போது விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் தமது பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான நம்பிக்கையற்ற நிலைமையினால் அடுத்தபோகத்தில் அவர்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவார்களா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

அடுத்ததாக விவசாயிகள் தமது இழப்பீடுகளுக்கான நட்ட ஈடுகளைப் பெறுதல், கடன்களை மீளச் செலுத்துதல் போன்றவற்றிலும் சவால்களை சந்திக்கின்றார்கள். இதனால் அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் பின்னடிப்புக்களைச் செய்யமுடியும். இந்நிலையில் இலங்கையில் மீன்பிடித்துறை மட்டுமே உடனடியாக செயற்படக்கூடி நிலையில் உள்ளது. அதன் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் மட்டுமே உடனடியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

அடுத்து கைத்தொழில் துறையை எடுத்துக்கொண்டால் ஆடைத்துறையே பெருமளவான வருமானத்தினை இலங்கைக்கு பெற்றுத்தருகின்றது.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள முடக்கத்தினால் 1.5 பில்லின் டொலர்கள் வருமானத்தினை அத்துறை இழந்துள்ளது. அரசாங்கம் 25 மில்லியன்கள் அத்துறையின் மீள் செயற்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்தாலும் அது போதுமானதாக இல்லை.

இதானல் அத்துறை மீள இயங்க ஆரம்பித்தாலும் தமது தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியைக் கூட குறைந்தது ஆறு மாத காலத்திற்கு செலுத்த முடியாத நிலைமையில் இருக்கின்றன. ஆறு மாதகாலத்திற்கு ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாதிருக்கும் வகையிலான விலக்கழிப்பை வழங்குமாறு அத்துறையினர் கோரிக்கையை தற்போது முன்வைத்துள்ளனர்.

அடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் சிதைந்து போயிருந்த உல்லாத்துறையானது தற்போது மீண்டெழுந்துகொண்டிருக்கையில் கொனோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 8சதவீத வருமானத்தினைப் பெற்றுத்தரும் அத்துறை தற்போது பூச்சிய நிலைக்குச்சென்றுவிட்டது. இதற்கு அடுத்தபடியாக கட்டுமானத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறிருக்க, முறைசாரா ஊழியர்கள் வேலை இழப்பினைச் சந்தித்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் துறையின் ஊழியர்களும் வருமான இழப்பினைச் சந்தித்துள்ளனர். தற்போதைய நிலைமை தொடர்ந்தால் தனியார் துறை ஊழியர்களும் பெருமளவில் வேலை இழப்பினைச் சந்திப்பதற்கே வாய்ப்புக்கள் உள்ளன.

கொரோன பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டாலும் உடனடியாக ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத சூழலே உள்ளது. காரணம் உலகளவில் கொரோனாவின் தக்கம் முற்றுப்பெறும் வரையில் விமான நிலையம், துறைமுகங்களை மீள திறந்து இயக்கமுடியாது. ஆகவே 70சதவீதம் ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளில் ஈடுபடும் நாடாக இருக்கும் இலங்கையால் அதனையும் மேற்கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கும்.

அத்துடன் இலங்கை பெருமளவில் இறக்குமதிகளைச் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் கடந்த காலத்தினைப்போன்று இறக்குமதிகளை மேற்கொள்ள முடியுமா என்பது ஒருவிடயமாகவுள்ளது. அதேபோன்று இலங்கை தனது பொருட்களைச் சேவைகளை ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் ஏற்றுமதியும் வெகுவாக பதிக்கப்படும்.

இவ்வாறான நிலையில் இலங்கை தனது பொருளாதார நிலைமையைக் கையாள்வதற்கு இருக்கும் ஒரே வழி கடன்களைப் பெறுவதாகும். இலங்கை நடுத்தரவ வருமான நாடு என்ற வகையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் கடந்த காலங்களைப் போன்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிய ஆகிய தரப்புக்களிடமிருந்து சலுகைக் கடன்களை பெறுவதும் இயலாத காரியமாகின்றது.

ஆகவே குறைந்த வட்டிவீத்திலான கடன்களை மட்டுமே இலங்கையால் உடனடியாக பெறமுடியும். அதனையும் சீனாவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்வதற்கான நிலைமைகளே அதிகமுள்ளன. ஆனால் இலங்கை ஏற்கனவே பெற்றுள்ள கடன்களையும் அதற்கான வட்டியையும் செலுத்துவதற்கு மொத்த வருமானத்தில் 53சதவீதத்தினை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில் இருக்கையில் மேலதிக கடன்களைப் பெறுமதி நாட்டின் மொத்த கடன்சுமையை மேலும் அதிகரிப்பதாகவே அமையும்.

இதனடிப்படையில் பார்க்கின்றபோது, கொரோனாவின் பிடியிலிருந்து இலங்கை மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படவுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் சக்தி இலங்கையிடமில்லை என்பது வெளிப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டிற்கான வருமானத்தினை விடவும் பொதுமக்களுக்காக அதிகளவு செலவீனத்தினை செய்ய வேண்டியதொரு நிலைமை தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதுவும் அரசாங்கத்திற்கு மிகவும் சவாலானதொரு விடயமாகும். ஆகவே திறந்த பொருளாதாரத்துடன் இறக்குமதி பதிலீடுகளையும் ஒன்றிணைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது முக்கியமாகின்றது.

Related posts: