கொரேனா அச்சுறுத்தல் – உள்ளுராட்சி மன்றங்கள் தமது செயற்பாடுகளை உரிய வகையில் முன்னெடுக முடியாமல் போனதால் மேலும் ஒரு வருடம் நீடிப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரன!

உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
தொற்றினால் பொருளாதாரம் மற்றும் வாழ்கை நிலையில் ஏற்பட்ட பாதிப்பினால் தற்பொழுது தேர்தலை நடத்தகூடிய ஸ்திர தன்மை நாட்டில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைவாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது 2 வருட காலம் வரையில் நல்லாட்சி அரசாங்கமே நாட்டை நிருவகித்தது.
இந்த காலப்பகுதியில் உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை அவற்றினால் உரிய வகையில் முன்னெடுப்பதற்கு முடியாமல் போனதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு தற்பொழுது கொவிட் தொற்றை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாதுள்ளது. இந்த நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட வகையிலேயே இருந்து வருகின்றது.
இதன் காரணமாக இந்த நடவடிக்கைகளை உரிய வகையில் முன்னெடுப்பதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரு வருடத்திற்கு நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டினார்.
கொரோனா தொற்றின் முதல் அலைக்கு மத்தியில் கூட நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றமையை சுட்டிக்காட்டிய அவர் இதனை தெரிவித்தார்.
இருப்பினும் இவ்வாறானதொரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சருக்கு உள்ள உரிமை மற்றும் அதிகாரத்தை பெஃப்ரல் அமைப்பு கேள்விக்குட்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தகக்து.
Related posts:
|
|