கொட்டித் தீர்க்கும் கனமழை – வெள்ளத்தில் மூழ்குகியது யாழ்ப்பாணம் – பாடசாலைகள் விடுமுறை – இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவு!

Tuesday, November 9th, 2021

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கனமழை தொடரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நகரப் பகுதி உட்படப் பல இடங்கள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தற்போதும் மழை வீழ்ச்சி தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதேவேளை அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.

அதேவேளை, மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், நீர் நிலைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நாளுக்கான பாடசாலை நாள் பிறிதொரு தினத்தில் அறிவிக்கப்படும் என்று மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வெள்ள இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: