கொக்கேய்ன் வர்த்தகர்களால் சீனி இறக்குமதி பாதிப்பு!

Friday, December 9th, 2016

பிரேஸிலிலிருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் சீனி கொள்கலன்களை கொக்கேய்ன் போதைப் பொருள் வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்வதனால் சினி இறக்குமதியில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் சீனி இறக்குமதி நடவடிக்கைகள் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக சீனி சங்கம் தெரிவித்துள்ளது.

பிரேஸிலிலிருந்து கப்பலில் அனுப்பி வைக்கப்படும் சீனி கொள்கலன்கள் ஐரோப்பா சென்று அங்கிருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழியை பயன்படுத்திக் கொள்ளும் போதைப் பொருள் வர்த்தகர்கள் உரிய நேரத்தில் ஐரோப்பாவில் போதைப் பொருட்களை எடுக்கத் தவறும் போது அந்த போதைப் பொருட்கள் இலங்கையை வந்தடைவதாக சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் அழைப்பாளர் ஹேமக பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்படுத்தாத நிலையில் அதிகளவு போதைப் பொருட்கள் மீட்கப்படுவதனால் சீனி இறக்குமதி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேஸிலிடமிருந்து சீனி இறக்குமதி செய்வது இலாபகரமானது என்ற போதிலும், சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் காலங்களில் பிரேஸிலிடமிருந்து இறக்குமதி செய்வதனை தவிர்த்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவளை, கொக்கேய்ன் போதைப் பொருள் சர்ச்சை காரணமாக பிரேஸிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 510 சீனி கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொள்கலன்கள் பூரணமாக சோதனையிடப்பட்டதன் பின்னரே விடுவிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Isolated illustration of an open sack containing sugar

Related posts: