கேப்பாப்புலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் சுவாமிநாதன்!

எதிர்வரும் 24ஆம் திகதி அமைச்சில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வடக்கில் எந்தப்பகுதிகளை விடுவிக்கலாம் என இணக்கம் காணமுடியுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்டு, பனை அபிவிருத்திச் சபையின் இரு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் டி.டிம் சுவாமிநாதனிடம், காணிவிடுவிப்பு குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பு குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதி அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளேன்.
அந்தவகையில், அனைத்து அமைச்சர்களுக்கும் கலந்துரையாடல் தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு படையினரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். அந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துகொள்வார்.
அவருடனும் கலந்துரையாடிய பின்னர் எந்தெந்த இடங்களை எந்த காலப்பகுதிகளில் கையளிக்க முடியுமென ஆராயந்து, அவற்றினை விடுவிக்க முடியுமென நம்புகின்றேன் என்றார்.இதேவேளை இதன்போது, கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் பாரிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கட்டடங்கள் மக்களிடம் மீளகையளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இராணுவத்தினர் கட்டியுள்ள பாரிய கட்டடங்களையும் கையளித்து விட்டு மாற்று இடங்களில் கட்டடங்களை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அவ்வாறு அவர்கள் வேறு இடங்களில் கட்டடங்களை அமைப்பதற்கு நிதி தேவை பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளார்கள்.
அந்த நிதி உதவிகளை அரசாங்கமே கொடுத்து, பாதுகாப்புப் படையினர் வேறு இடத்திற்குச் செல்வதற்கான வேண்டிய மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் கூறினார்.
Related posts:
|
|