கூட்டுறவுச் சங்கங்களின் “கோப்பிறஸ்” நிலையங்களூடாக பால்மா விநியோகம்!

Friday, May 27th, 2022

கூட்டுறவுச் சங்கங்களின் “கோப்பிறஸ்” பல்பொருள் விற்பனை நிலையங்களூடாக பால்மாவை விநியோகித்து வருவதாக, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது –

உணவு வழங்கலும், விநியோகமும் கூட்டுறவு சேவையில் அத்தியாவசியமாகும். இதனடிப்படையில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.

பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் “கோப்பிறஸ்” பல்பொருள் விற்பனை நிலையங்களூடாக இவ்விநியோகம் இடம்பெறுகிறது.

மத்திய அரசு, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை தேசிய கூட்டுறவுசபை ஆகியன இணைந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றன. கிழக்கில், மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், இதை, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை ஆகிய நான்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவிலுமுள்ள, பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் “கோப்பிறஸ்” விற்பனை நிலையத்தின் ஊடாக 400கிராம்  பால்மா 530.00 ரூபாவுக்கு விநியோகிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த சுமார் 75இலட்சம் ரூபா பெறுமதியான பால்மா, அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியுடன்,16கோப்பிறஸ் விற்பனை நிலையங்களூடாக  விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு பொதியிலும் பால்மா உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இவ்வேலைத்திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா ஆகியோரின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்படுகிறது.  

தற்போதைய சூழலில், பலநோக்கு கூட்டுறவு சங்கங்களூடாக பால்மா மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் நன்மையடைந்து வருவதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: