கூட்டமைப்பினர் உரிமைப்பிரச்சினைக்கு தீர்வு!

Sunday, March 26th, 2017

நீண்ட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்பார்த்திருந்த உரிமைப் பிரச்சினைக்கான தீர்வுகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது.

தமிழ் மக்களது உதிரங்களில் அரசியல் வியாபாரம் செய்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் கதிரைகளை பெற்றுக்கொண்டவுடன் வாக்களித்த மக்களை மறந்துவிடுவது வழமை.

அதன் பின்னர் தமிழ் மக்களது உரிமை பிரச்சினையை மறந்து தமது ஆடம்பர வாழ்வுரிமை பிரச்சினைகளை தென்னிலங்கை அரசுகளுடன் தமது அரசியல் அதிகாரங்களை கொண்டு பேரம் பேசி பெற்று திருப்திகண்டு வருவதும் வழமை.

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் கடந்த ஆட்சிக்காலத்தில் மறைமுகமாக தமக்கான உரிமைகளை பெற்றுவந்த கூட்டமைப்பினர் கடந்த ஆட்சி மாற்றத்தின்போது அரசுக்கு ஆதரவு கொடுப்பதற்காக பேரம்பேசி தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வாக எதிர்க்கட்சி தலைவர் பதவி பிரதி குழுக்களின் தலைவர் பதவி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர் பதவி என அனைத்து பதவிகளையும் பெற்று தமது கதிரை ஆசைகளுக்கான உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொண்டதுடன் தமிழ் மக்களது உரிமை பிரச்சினைக்கு பெரும்பகுதி தீர்வு கண்டுவிட்டதாக தெரிவித்து வந்தனர்.

இருந்தும் அவர்களுக்கு அப்போது அரசு கூறிய சில உறுதி மொழிகளை தீர்த்து வைக்காததனால் தொடர்ச்சியாக ஐ.நா சபைக்கு அரசை இழுத்துச்செல்லுவோம் என அடிக்கடி தமது அரசியல் அதிகாரத்தை கொண்டு மிகுதித் தீர்வையும் வழங்கமாறு வற்புறுத்தி வந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அழுத்தம் காரணமாக அரசு கொடுத்திருந்த வாக்குறுதிக்கமைவாக அவர்களது மிகுதி உரிமைப் பிரச்சினைக்கான தீர்வாக கூட்டமைப்பின் தலைவருக்கு ஆடம்பர மாளிகை ஒன்றை கொடுத்ததுடன் அதனை திருத்தம் செய்வதற்கான செலவாக இரண்டு கோடி இருபத்தைந்த இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.

அத்துடன் கூட்டமைப்பின் உபதலைவருக்கு நான்கு கோடி இருபது இலட்சம் ரூபா பெறுமதியான அதிசொகுசு ஆடம்பர வாகனம் ஒன்றையும் வழங்கி தமிழ் மக்களது உரிமைப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுகளை வழங்கியுள்ளது.

ஆனால் இவர்களுக்கு வாக்களித்த மக்கள் இன்று தெருத்தெருவாக அடிப்பிடை தேவைகள் தொடக்கம் வேலைவாய்ப்புகள் வரையான அனைத்து தேவைக்காகவும் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அரசியல் ரீதியில் தமிழரின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.????

Related posts: