கூட்டமைப்பினரின் வியூகத்தால் குடியிருந்த குடிசைகளையும் இழந்து நிர்க்கதி நிலையில் மக்கள் – ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 13th, 2021

ஜனாதிபதி தேர்தல் கால வெற்றிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை ஐக்கிய தேசியக் கட்சி நடைமுறைப்படுத்தியதாலேயே வடபகுதி மக்கள் தாம் வாழ்ந்த குடிசைகளையும் இழந்து நிர்க்கதிக்குள்ளாகினர் என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

வடமராட்சி கிழக்கு, அம்பன் சிவனொளி முன்பள்ளியில் மீனவ குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அம்பன் கிழக்கு கிராம முன்னேற்றச் சங்க பொருளாளர் அழகராசா முத்தழகன் தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தியை மேற்கொள்ள திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வந்தார். குறிப்பாக வடக்கின் வசந்தம், இந்திய வீட்டுத்திட்டங்கள், உலக வங்கியின் உதவியுடனான திட்டங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களினூடான திட்டங்கள் மற்றும் மத்திய அரசினதும் மாகாண அரசினதும் திட்டங்கள் என பல பணிகளை மேற்கொண்டு வந்தோம். ஆனால் 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல திட்டங்கள் கைவிடப்பட்டன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய நல்லாட்சி அரசின் அமைச்சராக இருந்த சஜித் பிதேமதாசாவை ஜனாதிபதியாக்குவதற்கு வடகிழக்கு மக்களின் வாக்குக்களை அபகரிப்பதற்காக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 30 கோடி ரூபாக்களைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வகுத்துக் கொடுத்த வியூகமே தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடான வீட்டுத்திட்டமாகும்.

வீடற்ற வறிய மக்களுக்கு முற்பணம் தரப்படும் என வாக்குறுதியளித்து தொடக்கி வைக்கப்பட்ட திட்டங்களால் மக்கள் குடியிருந்த குடிசைகளையும் இழந்து அத்திவாரங்கள் இட்ட நிலையில் இன்னல்களைச் சந்தித்து வருகிவதுடன் நிதியும் கிடைக்காமல் தொடங்கிய வீடமைப்புக்களை முடிக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.

இதற்கு கூட்டமைப்பினரே பொறுப்பாளிகளாக உள்ளனர். அவர்களால் புனரமைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அம்பன் – மருதங்கேணி வீதிகளும் வெடித்து உருக்குலைந்து பயணிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் திருமணமான வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். தமிழரசுக் கட்சியால் ஆட்சி செய்யப்பட்ட வடக்கு மாகாண அரசும் அவர்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட நல்லாட்சி அரசு என்ற ஆட்சியாளர்களும் எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீனவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்கான பயனாளிகள் திட்ட வரைபுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோது அதற்கான பொறுப்புடன் நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்துள்ளோம். தற்போது அமைச்சுப் பொறுப்பினை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் சிறப்பாக திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: