குளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது – சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார் உயிர் பிழைத்த மாலுமி!
Friday, September 11th, 2020கப்பலில் தீப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக MT New Diamond கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 57 வயதுடைய பனாமாக்கப்பல் மாலுமியும் பிலிப்பைன்ஸ் பொறியியலாளருமான எல்மோர் பல விடயங்களை தெரிவித்துள்ளார்.
கடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 மணி நேரம் வைத்திய நிபுணர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் சத்திர சிகிச்சை, அளிக்கப்பட்டு பின்னர் அதிதீவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக எல்மோர் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. செப்.3 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வழமைபோல எழுந்தவுடன் உணவைப் பெறுவதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன்.
அங்கு நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சுமார் 15 நிமிட நேரத்தின் பின்னர் காலைக்கடன் கழிப்பதற்காக குளியலறைக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு குளித்தேன். குளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை. யாரோ என்னைத் தாக்குவது போன்று உணர்ந்தேன்.
கப்பலில் ஒருபகுதி எரிவதைக் கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை. இருந்தும் இன்னும் நான் உயிர் வாழ்கிறேன். உண்மையில் இலங்கை மக்கள், இலங்கை கடற்படை, விமானப்படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள்.
குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகள் ஏனையோர் என்னைப் பராமரித்த விதம் மிகவும் கவர்ந்தது. வீட்டில் கூட அத்தகைய கவனிப்பு கிடையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|