குளக்கரை வீதியின் புனரமைப்பு எப்போது நடைபெறும்? – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சங்கீதா சபையில் கேள்வி!

Thursday, March 14th, 2019

மக்களுக்கான சேவைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொடுப்பதே ஒவ்வொரு பிரதேச சபையினதும் கடமையாகும். ஆனால்  எமது சபை பொறுப்பேற்று ஒரு வருடம் கழிந்த போதும் வலிமை மிக்க ஒரு சபையாக வளர்ச்சியடைந்துள்ளதாக எண்ணத் தோன்றவில்லை என்றே கருதவேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன் சங்கீதா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற சபை அமர்வின்போது குறித்த சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாமை தொடர்பாக கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது பிரதேசத்தில் வீதிகள் செப்பனிடல் தொடர்பான விடயங்களை நாம் பல தடவை சுட்டிக்காட்டியும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாமை வருத்தமளிக்கிறது.

குறிப்பாக குளக்கரை வீதியானது கற்கள் பரப்பப்பட்டு மூன்று வருடங்கள் கழிந்தும் இன்னும் முழுமை பெறவில்லை. குறித்த வீதியை மையமாகக் கொண்டு குடிமனைகள், பாடசாலை, ஆலயங்கள், விவசாய நிலங்கள் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றன அமைந்திருக்கின்ற போதும் இது செப்பனிடப்படாமல் இருப்பது ஏன்?

அதுமட்டுமல்லாது கரவெட்டி மத்தொணி பிரதேசத்தில் நீர்க்குழாய்கள் பொருத்தப்படாது வீதியின் அருகில் குழாய்கள் பரப்பப்பட்டிருப்பதும். தோண்டப்பட்ட குளிகளிலிருந்து எடுக்கப்பட்ட கற்கள் வீதியின் இரு புறங்களிலும் இருப்பதும் போக்குவரத்திற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இவற்றிற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன்.

அந்தவகையில் மக்கள் பணிக்கென இச்சபையை அமைத்துவிட்டு செயலற்றிருப்பது எவ்வகையில் நியாயமானது? என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.Related posts: