குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்- நீதிபதி இளஞ்செழியன்!
Tuesday, July 26th, 2016
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை எனவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமெனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விமான்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று(25) நடைபெற்றது.
யாழ்.மாவட்ட செயலக சிறுவர் அபிவிருத்தி அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், உடனடியாக வாக்குமூலம் பதிவு செய்யலாம் அல்லது வாக்குமூலம் பதிவு செய்யாது உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு அறிவித்தவுடன், பெலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். இவ்வாறான குற்றச்செயல்களை சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள முடியாது. இந்த குற்றங்களை நீதிபதிகளினாலும் கூட இணங்க வைக்க முடியாது.
பாலியல் துஷ்பிரயோக குற்றங்களில், பாடசாலை பழைய மாணவர் சங்கங்களோ, அபிவிருத்தி சங்கங்களோ தலையிடக் கூடாது. பாலியல் துஷ்பிரயோகம் குறித்து மாணவர்களினால் முறையிடப்பட்டால், நிர்வாக ரீதியாக கல்விப்பணிப்பாளருக்கும், கடமையின் நிமித்தம் பொலிஸாருக்கும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அதிபருக்கு இருக்கின்றது. எதிர்காலத்தில் இவ்வாறு அதிபர்கள் செய்யத்தவறினால், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் நீதிமன்றிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள்.
குற்றம் புரிந்தவருக்கு நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்க முடியும். ஆனால், சாட்சியங்களை மிரட்டியவர்களுக்கு நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்க முடியாது. பிணை மனுவினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும்.பாலியல் துஷ்பிரயோக குற்றம் ஆபத்தானவை. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலியல் வன்புணர்வு குற்றம் செய்பவர்கள் அல்ல. ஆனால் 5 வீதமானவர்கள் குற்றம் செய்கின்றார்கள். அந்த 5 வீதமானவர்களையும் இல்லாது ஒழிக்க வேண்டியவர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி உயர் அதிகாரிகள் என்பதனை மறவாதீர்கள்.
பாலியல் வன்புணர்வு குற்றம் செய்பவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு பாதுகாப்பது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்’ என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|