குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக உதவி திட்டம் – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022

இலங்கை மக்களுக்கு சமூக உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால தேவைகள் நிதியத்தின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், உலக வங்கி அதற்காக முழுமையாக இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசாங்கத்தினால் உள்நாட்டில் பெறப்பட்ட கடன்களை திறைசேரி உண்டியல்கள் மற்றும் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் என மறுசீரமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதே இலங்கை அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: