குறுகிய நோக்கங்களை அடைவதற்காக சிலர் முன்னெடுத்துவரும் தவறான எண்ணங்களை, வர்த்தக சமூகத்தினரால் மாத்திரமே சரி செய்ய முடியும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Tuesday, February 22nd, 2022

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்குத் தனியார்த் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்நியச் செலாவணியை உருவாக்குதல், அரச நிதிக்கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு, முதலீடுகளை ஊக்குவித்தல், ஏற்றுமதியை மேம்படுத்தல், மீள் பிறப்பிக்கத்தக்க சக்தி வலு, விவசாய உற்பத்திகள், போதுமானளவு பசளை விநியோகம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றுள்ளது.

மீள் பிறப்பிக்கத்தக்க சக்தி வலு, பசுமை விவசாயம், தொழில்நுட்பப் பூங்காக்கள், பசுமை இல்லங்கள் உள்ளிட்ட பலதுறைகளுக்கான பாரியளவு முதலீட்டுடன் அந்நியச் செலாவணியை நிர்வகிக்கும் பாரிய சந்தர்ப்பம் கிட்டும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கொரோனா பரவல் நிலைமைக்கு முகங்கொடுத்துக் கொண்டே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முயன்று வருகின்றது.

இந்தநிலையில், பலர் தங்களது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்னெடுத்து வரும் தவறான எண்ணங்களை, வர்த்தக சமூகத்தினரால் மாத்திரமே சரி செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: