குடாநாட்டு மக்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Thursday, May 13th, 2021

வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றது. தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் அதிகரித்துள்ள கோவிட் தொற்று நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், பி.சி.ஆர். பரிசோதனை இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் பணி தொடங்கவுள்ளது. ஒரு நாளில் ஒரு தடவை மேற்கொண்ட பரிசோதனையை இனிவரும் காலத்தில் இரவு நேரத்திலும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளாந்தம் 800 இற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமானது.

தற்போது யாழ். குடாநாட்டில் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது. வெளிநோயாளர் பிரிவுக்கு வருபவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்தால் அவர்கள் உடனடியாக அண்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பி.சி.ஆர். பரிசோதனையும் அவர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. அப்படிச் செய்யும் போதும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழ் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் மையம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அங்கு போதுமான ஒட்சிசன் சிலிண்டர்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு தங்கி சிகிச்சை பெறுவோருக்குத் தேவையான வசதிகள், அம்புலன்ஸ் வாகன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு நோயாளிக்கு ஒட்சிசன் தேவை என்றால் அவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: