குடாநாட்டில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர்!

Monday, December 12th, 2016

யாழ். மாவட்டத்தில் 60 வீதமானவர்கள் மதுபாவனை, புகைபிடித்தல் மற்றும் ஏனைய போதைப்பொருட்கள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்திலிருந்து புதிதாகப் பல்கலைக்கழகத்திற்கு இணைத்து கொள்ளும் மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான வலுவூட்டும் செயலமர்வொன்று இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்,

இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரச அதிகாரிகள் என்ற ரீதியில் நாங்கள் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன்மூலம் எந்தவொரு பலாபலன்களும் இல்லை. இவ்வாறான நிலையில் பல்கலைகழகச் சமூகத்தின் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றோம்.

இதன் ஊடாக எதிர்காலத்தில் ஒரு வலுவான கட்டமைப்பினை உருவாக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வரவேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கத்தின் கொள்கைகள், செயற்பாடுகள் அமைந்துள்ளன.

நாட்டின் தேசிய வருமானத்தில் இவ்வாறான போதைப்பொருட்களும் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது என்பது மிகவும் பாரதூரமான விடயம். இளைய சமுதாயம் வாழ வேண்டும். அதற்காக நாமனைவரும் ஒருமித்து மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படும் போதே எமது எதிர்காலம் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

1 copy

Related posts: