குடாநாட்டில் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வறட்சி உதவி – யாழ். மாவட்டச் செயலர் தகவல்!

Friday, December 14th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 ஆயிரத்து 7 குடும்பங்களுக்கு வறட்சிக்கான உதவிகள் 3 கட்டங்களாக இடர் முகாமைத்துவ சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்ட வறட்சியின் போது பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களுக்கேற்ப பிரதேச செயலக ரீதியில் உதவிகள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் முதற்கட்டமாக 14 ஆயிரத்து 460 குடும்பங்களில் 7 ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களும் 7 ஆயிரத்து 160 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களும் வழங்கப்பட்டன. இதேபோன்று இரண்டாம் கட்டமாகவும் வறட்சி நீடித்ததையடுத்து முன்னர் உதவி வழங்கிய 14 ஆயிரத்து 460 குடும்பங்களுக்கும் அதே அளவிலான பொருள்கள் மீண்டும் வழங்கப்பட்டன.

தற்போது 3 ஆம் கட்டமாக முன்னர் வறட்சி உதவி வழங்கிய குடும்பங்களைத் தவிர ஏனைய 20 ஆயிரத்து 547 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்படி 9 ஆயிரத்து 190 குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருள்களும் 11 ஆயிரத்து 357 குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.

Related posts: