குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்த எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன!  – டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 24th, 2016

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 19ம் திகதி வரை யாழ்.குடாநாட்டில் 3 கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 50 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு முதல் 2016ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் 74 கொலைகளும், 184 பாலியல் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பியிருந்த கேள்விக்கு நேற்றுச் சபையில் சமர்ப்பித்திருந்த பதிலிலேயே அமைச்சர் சாகல இந்த விடயத்தை தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை, கொள்ளை, வாள்வெட்டுக் கொலை, அச்சுறுத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகக் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இவ்வாறான குற்றங்களை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கை என்ன என்று அவர் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் அமைச்சர் சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகின்ற போதும் குற்றச் செயல்கள் தொடர்பான வருடாந்த அறிக்கையின் தகவல்களை ஆராய்ந்து பார்க்கும்போது கடந்தவருடங்களுடன் ஒப்பிடும்போது அண்மைக்காலமாக பதிவாகும் குற்றச் செயல்களின்எண்ணிக்கை குறைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. யாழ்குடாநாட்டில் 2011ம் ஆண்டு 23, 2012ம் ஆண்டு 16, 2013ம் ஆண்டு 11, 2014ம் ஆண்டு 10 மற்றும் 2015ம் ஆண்டு 11 கொலைகள் இடம்பெற்றுள்ளன. 2016 ஜனவரி முதல் மே 19 வரை 03 கொலைகள் இடம்பெற்றுள்ளன.

பாலியல் துஷ்பிரயோகங்கள் 2011ம் ஆண்டு 34, 2012ம் ஆண்டு 41, 2013ம் ஆண்டு 36, 2014ம் ஆண்டு 33 மற்றும் 2015ம் ஆண்டு 26 சம்பவங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை, 2016 ஜனவரி முதல் மே மாதம் 19 திகதி வரை 14 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மேற்குறிப்பிட்ட காலப் பகுதிகளில் இடம்பெற்ற 50,000 ரூபாவுக்கு மேற்பட்ட வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் 2011ம் ஆண்டு 51, 2012ம் ஆண்டு 61, 2013ம் ஆண்டு 63, 2014ம் ஆண்டு 36, 2015ம் ஆண்டு 37 மற்றும் 2016 ஜனவரி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை 16 என மொத்தமாக 264 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, 50,000 ரூபாவுக்கு மேற்பட்ட வீடுடைப்புக் கொள்ளை 2011ம் ஆண்டு 81, 2012ம் ஆண்டு 83, 2013ம் ஆண்டு 93, 2014ம் ஆண்டு 107, 2015ம் ஆண்டு 52 மற்றும் 2016ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் 19ம் திகதி வரை 23 என மொத்தமாக 439 வீடுடைப்புக் கொள்ளை்ச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இதற்கு மேலும் உரிய நடவடிக்கை திட்டமிடப்படுகின்றது என்பது தெளிவாகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: