கிழக்கு மாகாணத்தை ஆட்டம் காணச் செய்தது கொரோனா: ஒரே நாளில் 27 பேருக்கு தொற்றுறுதி – எச்சரிக்கிறார் சுகாதாரப் பணிப்பாளர்!

Saturday, October 24th, 2020

கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அழகையா லதாகரன் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர் என்றும் பொதுமக்கள் இதுவிடயத்தில் தமக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இவ்விடயத்தில் பொதுமக்கள் தமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்காதுவிட்டால் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம் என்றும் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்..

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர் –

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும், அம்பாறையில் ஒருவருமாக கொரோனாத் தொற்றுடன் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகத்தின் பேரில் பலரை தேடிப்பிடித்து தனிமைப்படுத்தி PCR பரிசோதனை செய்தபோது இந்த 27 பேர் தொற்றுக்குள்ளானது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனைக்குடியில் 03 பேரும், நிந்தவூரில் 01 பெண்மணியும், பொத்துவிலில் 05 பேருமாக 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் வாழைச்சேனை கோறளைப்பற்றில் 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பி வந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.

நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணியின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. அதுமட்டுமல்லாது இன்னும் பலர் சமூகத்துள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது விடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் அறியத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் அலட்சியமாகவிருந்தால் கிழக்கில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். சுகாதாரத்துறை மட்டும் இவ்விடயத்தில் கவனமெடுத்தால் போதும் என்று எண்ண வேண்டாம். எனவே தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு வேண்டுகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: