கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை செயலாளர் ஸ்டாலின் விளக்கம்!

Tuesday, April 28th, 2020

கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் தரப்புகளை ஒரு கூட்டாக ஒன்றினைத்து பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த முயற்சி வெற்றியளிக்காத காரணத்தினால் கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக எவரும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவில்லை என்று அதன் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு போட்டியிடாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஈபிடிபி தனித்து போட்டியிடுவது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது

கிழக்கு மாகாணத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகள் , பொது அமைப்புக்கள் மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தனி நபர்கள் என அனைவரையும் ஒன்றினைத்து பொதுச் சின்னம் ஒன்றில் போட்டியிடக் கிடைக்காத நிலையிலேயே கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இரு பங்காளிக் கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், அகில இலங்கை தமிழர் மகா சபையும் தனித்தனியே அவரவர் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவு செய்யப்பட்டது.

இதுவே உண்மையாக இருக்கையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கப்பல் சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறையிலும், திருகோணமலையிலும் போட்டியிடுவதாக கூறப்படுவதானது மக்களுக்கு தவறான செய்தியை பரப்புவதாகவே அமையும். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தனிக்கட்சி ஒன்றின் கவசமல்ல

என்பதையும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் செயலாளர் என்றவகையில் பொறுப்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிழக்கில் தமிழ் மக்களிடையே அரசியல் செயற்பாட்டிலுள்ள அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பாக கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு கிழக்கின் ஆட்சிப்பொறுப்பை தமிழ் முதலமைச்சரின் கீழ் கொண்டுவருவதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வலிமையை ஊக்குவிப்பது, அன்றாடப்பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண்பது மற்றும் பல தசாப்தங்களாக பின்னடைவு கண்டுள்ள அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது போன்ற முக்கிய பணிகளை பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுத்துவது என்பதே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், முற்போக்கு எண்ணம் கொண்ட தனி நபர்கள் உள்ளடங்கிய குழுவினர் அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

ஈபிடிபியாகிய நாம் கிழக்குத் தமிழர்களின் வாழ்வை அனைத்து வழிகளிலும் மேம்படச் செய்வதற்கு அரசியல் ரீதியாக கூட்டாகச் செயற்படுவதன் தேவையை ஏற்றுக்கொண்டதுடன் இணைந்து செயல்படுவதற்கான உள்மன விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன், கூட்டுச் செயற்பாட்டுக்கு முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டுக்கான ஒப்பந்தத்தில் முதல் பங்காளியாக கையொப்பமும் வைத்தோம்.

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அனைவரின் இணக்கத்தையும் பெற்றுக் கொள்வதற்கான பேச்சைவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பை கோபாலகிருஷ்ணன் தலைமையிலான பொது அமைப்பினரே முன்னெடுத்திருந்தனர்.

எனினும் அணுகுமுறைத் தவறு மற்றும் அநாவசியமான அவசரம் என்பவற்றால் ஆரம்பத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் அக்கறையோடு ஈடுபாடு காட்டிய பொது அமைப்புக்களைச் சிலர் அதிருப்தியோடு பிரிந்து கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்று செயற்படத் தொடங்கினார்கள்.

அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தோழர்களான விஸ்ணுகாந்தன் தலைமையிலான இலங்கை மக்கள் தேசிய கட்சி, அருண்தம்பிமுத்து தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சி, வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழ்க் கட்சி மற்றும் சமூக அக்கறையோடிருந்த தனிநபர்கள்

ஆகியோர் தாமாக ஒதுங்கி செயற்பட்டனர்.

இவ்வாறான பின்னணியிலேயே தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பெயரில் எவரும் போட்டியிடாது ஈபிடிபி வீணைச் சின்னத்திலும், அகில இலங்கை தமிழர் மகாசபையினர் அவர்களது கப்பல் சின்னத்திலும் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பை பாதுகாத்து, தேவையான திருத்தங்களைச் செய்து அடுத்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் கிழக்கின் மாபெரும் சக்தியாக களமிறக்கி அதன் நோக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.

இந்நிலையில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் நல்ல நோக்கத்தை பாவித்து சுயலாப அரசியல் இலாபத்தை தேட எவருக்கும் இடமளிக்க முடியாது என்பதை கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துவது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செயலாளர் என்றவகையில் எனது கடமையாகும்.

Related posts: