கிளி வைத்தியசாலை கொவிட் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!

Thursday, September 2nd, 2021

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

கொவிட்-19 நெருக்கடிச் சூழலில் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முக்கிய பணிகள் தொடர்பாகவும், இந்தச் சேவைகளை திறம்பட முன்னெடுப்பதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் வசதிகள் தொடர்பாகவும் இதன்போது அவர் கலந்துரையாடினார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் செல்வராசா சுகந்தன் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் ராஜேந்திரன் தனுஷன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மெய்நிகர் வழியில் நடாத்தப்பட்ட மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலில் வைத்தியசாலைத் தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் இதுதொடர்பாக மேலதிக இணைப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தினார்.

குறிப்பாக, கொவிட் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில், சடலங்களைப் பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதி தொடர்பாக சட்ட மருத்துவ அதிகாரி விடுத்த வேண்டுகோள் குறித்து இதன்போது கலந்துரையாடிய மேலதிக இணைப்பாளர், இதற்கென மாவட்டச் செயலாளர் உறுதியளித்தப்படி வழங்கியிருக்கும் கொள்கலனைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்தக் கொள்கலனை சடலங்களைப் பேணுவதற்கான குளிரூட்டியாக மேம்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு சிலரது நிதியுதுவிகள் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுவிடும் என்றும் இதன்போது சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் தனுஷன் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக மின்தகன வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், எளிமையான முறையில் எரிவாயு மூலம் சடலங்களைத் தகனம் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் குறித்தும் சட்ட வைத்திய அதிகாரி இதன்போது பரிந்துரைத்ததுடன், இதனை இலங்கையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் விசேட கொவிட் விடுதி, கொவிட் அவசர சிகிச்சைப் பிரிவு, அவசரசிகிச்சைக்கான முன்னாயத்தப் பிரிவு, கொவிட் பரிசோதனை வசதிகள் மற்றும் இரத்த சுத்தீகரிப்பு உபகரணப் பிரிவு ஆகியவற்றையும் மேலதிக இணைப்பாளருக்கு நேரில் காண்பித்த வைத்தியசாலைப் பணிப்பாளர், தமக்கு உடனடியாகத் தேவைப்படும் சில உதவிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடினார்.

மேலதிகமாகத் தேவைப்படும் ஒட்டிசிசன் சிலிண்டர்கள், இரத்த சுத்தீகரிப்பு உபகரணம், அதற்குரிய றெகுலேற்றர்கள் என்பன குறித்தும் இதன்போது அவர் தமது கோரிக்கையை முன்வைத்தார்.

இவை குறித்து, ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உடனடியாக அறியத்தந்து, தேவைப்பாடுகளை நிறைவேற்ற ஆவன செய்வதாக, அமைச்சரின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: