கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்க அதிபர் உறுதி!

Friday, July 15th, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உரத்தினையும், அறுவடைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் காலம் பிந்திய விதைப்புகள் மேற்கொண்டுள்ள ஏறத்தாழ ஆறாயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கு யூரியா உரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அதாவது பல்வேறு காரணங்களுக்காக காலம் தாழ்த்தி பயிர்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா உரத்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மட்டத்திலேயே நடைபெற்றுள்ளது.

இதில் துறைசார்ந்த அதிகாரிகளும் கமக்கார அமைப்புகளினுடைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அதன் அடிப்படையிலேயே கமக்காரா அமைப்புகளால் சமர்ப்பிக்கப்படுகின்ற விபரங்களுக்கு அமைய அவற்றை உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி உரத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும் விவசாயிகளுடைய அறுவடைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: